Blog Detail

மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் விழா

ஹிதாயா இஸ்லாமிய மகளிர் கல்லூரி சார்பாக கடந்த ஆண்டு 10th, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பெய்ன்ஸ் மெமோரியல். (Baynes memorial Baptist Church) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்
6-7-2024 மாலை 3.45 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர்.அமத்துல் அஜீஸ் (Dr.Amthul Azeez- ஜஸ்டிஸ் பஷீர் அஹமது கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் துவக்கவுரை ஆற்றிய ஜ.இ.ஹி சென்னை பெருநகர தலைவர் நஸீர் அதாவுல்லாஹ் அவர்கள் பேசும்போது :
நம்முடைய கல்விக்கூடங்கள் இரண்டு விஷயங்களை போதிக்கின்றன. ஒன்று கல்வி. மற்றொன்று புரிதல் (understanding) கல்வியின் மூலமாக நாம் மதிப்பெண்களை பெறுகின்றோம். புரிதல்கள் மூலமாக நாம் சில அடிப்படைகளை அறிந்து கொள்கின்றோம்.நாம் யார், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் எதற்காக படிக்கின்றோம், இவற்றை படைத்தவன் யார், எதற்காக நாம் இந்த உலகிற்கு வந்துள்ளோம் என்பவற்றை தெரிந்து கொள்கின்றோம்.இந்த புரிதலை கொடுக்காத கல்வி பயன்படாத கல்வியாக ஆகிவிடுகிறது.

பெற்றோருக்கு கண்ணியமளித்தல், ஆசிரியர்களுக்கு கண்ணியம் அளித்தல், இளமையின் அருமையை உணர்ந்து செயல்படல், காலத்தின் அருமையை உணர்ந்து செயல்படல் மற்றும் உங்களுக்கு உள்ள வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் இவையெல்லாம் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான அம்சங்கள் ஆகும்.

உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடியவற்றை அடையாளம் கண்டு அவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும். தீய நண்பர்கள், பொழுதுபோக்கு என்னும் பெயரில் வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை விட்டு முற்றாக விலகி விட வேண்டும். அவை நமது உள்ளத்தில் இருந்து வந்தாலும் வெளியிலிருந்து வந்தாலும் அவற்றை நமது சுய கட்டுப்பாட்டின் மூலம் தவிர்த்து விட வேண்டும்.

ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் நாடு பன்மை சமூக அமைப்பை கொண்டது. எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன. ஒழுக்கத்தை போதிக்கின்றன. வெறுப்பை வெறுக்கின்றன.

நீங்கள் மிக அதிகமாக நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SIET முதல்வர் அவர்கள் பேசும்போது சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் வழங்கிய அறிவுரைகள் எல்லாமே முத்துக்களை போன்றவை என்று குறிப்பிட்டார். பிள்ளைகளை பாராட்டுவது ஆர்வமூட்டுவது மிக முக்கியமான விஷயம். அதை செய்ததற்காக இந்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்காலத்தில் ஆர்வம் மூட்டுவது மிகவும் குறைந்து வருகிறது.

தமிழில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். குழந்தையின் முதல் வார்த்தை அம்மா என்பதுதான். பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும். கண்ணியப்படுத்த வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம், “யாருக்கு அதிகம் மதிப்பளிக்க வேண்டு” மென்றுகேட்கப்பட்டது. அப்போது அவர்கள்,  மூன்று முறை, “தாய் !” என்று குறிப்பிட்டார்கள். நான்காவது முறை,  “தந்தை !”என்றார்கள். பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதித்து நடந்தால் இறைவனின் அருள் கிடைக்கும்.

சில விஷயங்களில் நீங்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் சந்தித்து சிந்தித்து உங்களது உள்ளத்திலிருந்து வரும் சிந்தனை உயிர்ப்புள்ளதாக இருக்கும். நான் அடிக்கடி ஒரு உதாரணத்தை கூறுவதுண்டு .ஒரு முட்டை இருக்கிறது. அதை வெளியிலிருந்து உடைத்தால் அது உணவாக பயன்படலாம். ஆனால் அது உள்ளிருந்து உடைக்கப்படும் போது அதிலிருந்து உயிருள்ள கோழி குஞ்சு வெளியாகிறது. எனவே நீங்கள் சுயமாக சிந்தித்து உங்களை நீங்கள் வெளிப்படுத்தும்போது அதில் உயிர்ப்புள்ள விஷயங்கள் வெளிப்படும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும். பெற்றோர்களும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும். ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெய்ன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அவர்கள் பேசும் போது பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். நீ ஒரு பெண் தானே? நீ ஏன் இவ்வளவு படிக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். நீங்கள் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நீங்கள் தன்னம்பிக்கையோடு துணிந்து செயல்பட்டு கல்வியில் உயர் நிலைக்கு வர வேண்டும். சில நேரங்களில் மதிப்பெண் குறைந்து போகலாம். அல்லது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் கூடப் போகலாம். அதையே காரணமாக்கி உங்கள் கல்விக்கு முட்டுக்கட்டை போட முனைவார்கள். நம்மால் முடியுமா? என்ற பயத்தை தூக்கி எறிந்து விட்டு தன்னம்பிக்கையோடு முயன்றால் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

தொகுப்பு :
B.சையது இப்ராஹிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *